பிப்.யில் மத்திய பட்ஜெட் தாக்கல்?: நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தின்  பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய  பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகை அறிவிப்புக்கள்,  உள்கட்டமைப்பிமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியன இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2019-20 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் பட்ஜெட்டை தயாரிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற  வேண்டிய பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் குறித்து நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை  நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன் கடந்த  ஜூன் மாதம் 40 பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி டுவிட்:

இதற்கிடையே, மத்திய பட்ஜெட் நாட்டின் 130 கோடி மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.  இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாட்டு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மத்திய பட்ஜெட் நிறைவேற்றும். வளர்ச்சிக்கான  திட்டங்கள் இதில் இடம் பெறும். பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை ‘மைகவ்’ என்ற அரசின் இணையதளத்தில்  வழங்கலாம்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: