குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட இடத்தில் தமிழக டிஜிபி திரிபாதி ஆய்வு செய்தார். நேற்று களியக்காவிளை  சோதனை சாவடியில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழக டி.ஜி.பி. திரிபாதி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெக்ராவை சந்தித்து பேசினார். இருவரும் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 2 பயங்கரவாதிகளின் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது கொலை செய்யப்பட்ட இடத்தில் தமிழக டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினார்.

அவருடன் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஷ்வரன், நெல்லை சரக டிஐஜி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஆகியோரும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் எவ்வாறு சுடப்பட்டது? எங்கிருந்து மர்மநபர்கள் உள்ளே வந்தார்கள்? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் தென்மண்டல ஐஜி மற்றும் நெல்லை சரக டிஐஜியுடன் திரிபாதி ஆலோசனை நடத்தினார். குற்றவாளியை நெருங்கிவிட்ட இந்நிலையில், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்? மற்றொரு குற்றவாளி யார் என்பது பற்றியும் திரிபாதி விசாரணை நடத்தினார். பின்னர் வில்சனின் குடும்பத்திற்கு டிஜிபி திரிபாதி ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சுட்டுக்கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களாக காவல்துறை வெளியிட்டுள்ள இருவரின் புகைப்படங்கள் தொடர்பாகவும் திரிபாதி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம் எனவும், விசாரணைக்கு பிறகே இதுகுறித்த தகவல்கள் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: