சென்னை மாநகராட்சி பூங்கா, பள்ளிகளில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட யோகா பயிற்சி நிறுத்தம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி பூங்கா, பள்ளிகளில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட யோகா பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக பேரவையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன்(திமுக) துணைகேள்வி எழுப்பி பேசியதாவது: 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் 38 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு இலவசமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சியில் பணிபுரிந்த வாகன ஓட்டுநர்கள், மாநகராட்சி உறுப்பினர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. எல்லாவற்றிக்கும் மேலாக சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை நிர்வகித்த 27 உயர்நிலைப்பள்ளிகள், 38 மேல்நிலைப்பள்ளிகள் ஆக, 138 பள்ளிகளில் யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டு, 100 ஆசிரியர்களை கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறுக்கு அனுப்பி, அங்கிருந்து பயிற்சி பெற்று வரவழைத்து, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் யோகாவை ஒரு பாடமாக்கி பயிற்றுவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த காலங்களில் பூங்காக்களிலும் யோகா இல்லை. ஓட்டுநர்கள், அலுவலர்களுக்கு யோகா பயிற்சி இல்லை, பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி இல்லை. அப்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கும் யோகா பயிற்சி தொடங்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. எனவே, சென்னை மாநகராட்சியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் பயில்கிற அனைத்து மாணவர்களுக்கும் யோகாவை ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “ ஆழியாறில் பயிற்சி பெற்று வந்திருக்கிற ஆசிரியர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்குவது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சருடன் ஒருங்கிணைத்து பேசி, மீண்டும் அதை புதுப்பிப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்” என்றார்.

Related Stories: