தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய யார் காரணம்?

சென்னை: கலைஞர், ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் நீட் நுழைய முடியவில்லை. தற்போது நுழைய யார் காரணம்? என்று மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 6ம் தேதிதான் இறுதிநாளாகும். ஆனால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது 4ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீது விசாரணை நடந்ததா, என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? நீட் தேர்வை ரத்து செய்ய 2 மசோதாக்கள் இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா திரும்பி வந்து விட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்றுகூட தெரியவில்லை. மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சட்ட அமைச்சர்ஆவேசமாக பேசினார். அப்படி நிராகரிக்கப்பட்டால் சிறப்பு கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என்று முதல்வரும் கூறினார். இதுவரை எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதிதாக ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது? இது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இந்த அரசு செய்யும் மிக பெரிய துரோகம். அரசு என்ன விளக்கம் தர போகிறது?

அமைச்சர் விஜயபாஸ்கர்: கடந்த 27.12.2010 அன்று, மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், ‘’நீட்’’டுக்கான விதை விதைக்கப்பட்டது. அதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். மு.க.ஸ்டாலின்: இது தொடர்பாக திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில்தான், 18.7.2013 அன்று நீட் தேர்வை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயபாஸ்கர்: அப்போது நீட் இல்லை என்று தீர்ப்பு வந்தாலும் சீராய்வு வழக்கில் 14.4.2016 அன்று அந்த தீர்ப்பை திரும்ப பெற்று கொண்டது. மூல வழக்கு நிலுவையில் உள்ளது. புதிய வழக்கு தொடர்ந்துள்ளோம். நீங்களும் (திமுக) இதில் இணைந்து போராட வேண்டும்.

துரைமுருகன் (எதிர்க்கட்சி துணைத்தலைவர்): ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தலைகாட்டவில்லை. அவர், மறைந்த பிறகுதான் நீட் தலைகாட்டியுள்ளது. விஜயபாஸ்கர்: ஜெயலலிதா, இதே சட்டமன்றத்தில் பேசும்போது, ‘’திமுக தும்பை விட்டு வாலை பிடிக்கிறது’’ என்றார். மு.க.ஸ்டாலின்: கலைஞர் முதல்வராக இருந்தவரை, தமிழகத்தில் நீட் நுழையவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரையும் நீட் நுழைய முடியவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் உங்கள் பொதுக்குழுவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். நீங்கள்தான் தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள். துரைமுருகன்: ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தீர்கள். ஆனால், மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதற்கு என்ன செய்தீர்கள். தும்பை ஏன் பிடிக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: