பின்னல்வாடி அரசு உயர்நிலை பள்ளியின் அவலம்: போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்

* தரம் உயர்த்தப்பட்டும் பயனில்லை

* கல்வி அதிகாரிகள் நடவடிக்கை தேவை

உளுந்தூர்பேட்டை: பின்னல்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டும் போதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தராததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடை கோடி கிராமமாக உள்ளது பின்னல்வாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் பின்னல்வாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்காலிகமாக உயர்நிலைப்பள்ளி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளில் நடைபெற்று வருகிறது. நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரையில் மாணவ, மாணவிகளுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக்கொடுக்காத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஆய்வு கூடங்கள், கழிவறை கட்டிடங்கள் என எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரையில் இந்த பள்ளிக்கு செய்துதரப்படவில்லை. மழை காலங்களில் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிற கல்வி ஆண்டிலாவது அனைத்து மாணவர்களுக்கும் போதிய வகுப்பறை கட்டிடத்தில் அடிப்படை வசதிகளுடன் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்துதர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: