அதிமுகவினர் கட்டுப்பாட்டிலுள்ள திமுக கவுன்சிலரை ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அதிமுகவினர் கட்டுப்பாட்டிலுள்ள திமுக ஒன்றிய கவுன்சிலரை ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வதியனேந்தலைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த  மனு: என் தந்தை சாத்தையா (58) சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3ம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை  சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பில்லை.  செல்போனில் எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நாங்களும், திமுகவினரும் எனது தந்தையை மீட்டுத் தருமாறு முதுகுளத்தூர் போலீசில் முறையிட்டோம். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 6ம் தேதி எனது தந்தையை அழைத்து வந்து  பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை சந்திக்க முயன்றேன். தடுத்துவிட்டனர். பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.

எனது தந்தையை அதிமுகவினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் நேற்று அவசர வழக்காக விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் ஜான்ராஜதுரை ஆஜராகி, ‘‘முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜன. 11ல் நடக்கிறது.  இந்தப் பதவியை கைப்பற்ற அதிமுகவிற்கு மெஜாரிட்டி இல்லை. எனவே, திமுகவினர் தலைவராவதை தடுக்கும் வகையிலும், தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திடவும் எண்ணி திமுக கவுன்சிலரை கடத்தி அடைத்து வைத்துள்ளனர்’’  என்றார். அரசு வக்கீல் ஆனந்தராஜ், ‘‘சாத்தையா யாருடைய சட்டவிரோத காவலிலும் இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு  தள்ளிவைத்தனர்.

கணவரிடம் ஒப்படைப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே டி.கரிசல்குளத்தைச் சேர்ந்த சின்னமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி வாசுகி, கடலாடி ஊராட்சி ஒன்றியம் 18வது வார்டில் திமுக சார்பில்  போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரை விட 700 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற ஆளும்கட்சியான அதிமுகவிற்கு போதுமான மெஜாரிட்டி இல்லை. அதிமுகவைச் சேர்ந்த  தர்மர், தனது மகளை ஒன்றிய பெருந்தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 3ம் தேதி காலை 11 மணியளவில், சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது காரில் வந்த  அதிமுகவைச் சேர்ந்த தர்மர், அவரது மகளுக்கு ஆதரவாக என் மனைவியை வாக்களிக்க கோரி வலுக்கட்டாயமாக அவரது காரில் ஏற்றிச்சென்றார். எனவே, ஜன. 11ல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலை என் மனைவி கிடைக்கும்  வரை நடத்த தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மனுதாரரின் மனைவி கண்டறியப்பட்டு அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  தற்போது மனுதாரருடன் உள்ளார்’’ என ெதரிவித்தார். இதையடுத்து அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப். 3க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: