குருத்வாரா மீது முஸ்லிம்கள் தாக்குதல்; சீக்கிய இளைஞர் மர்ம கொலை: கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

டெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கனா சாகிப் என்ற இடத்தில் சீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக் தேவ் பிறந்தார். அவர் நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் சீக்கிய  அதிகாரியின் மகளை, அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பெண்ணின் சகோதரர் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் கடந்த 3-ம் தேதி அப்பகுதி சீக்கியர்கள் மீதும், குருத்வாரா மீதும்  தாக்குதல் நடத்தினர். இதற்கு மத்திய அரசும், பஞ்சாப் முதல்வர்அமீரிந்தர் சிங் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், குருத்வாராக்களை நிர்வகிக்கும் சிரோன்மணி குருத்துவார பிரபந்தக் கமிட்டி, இது  குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட குழுவினர் பாகிஸ்தான் செல்ல உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில்,  ‘டீக்கடையில் நடந்த மோதலால் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 2 குழுக்கள் மோதிக்கொண்டன. இதில் போலீசார் தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இதை மதரீதியான தாக்குதல் என வதந்தி பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன.  குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் நாட்டில் சீக்கியப் பிரிவைச் சேர்ந்த முதல் செய்தி வாசிப்பாளரின் சகோதரர் ரவிந்தர் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்,  இந்த இரு சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு இந்தியா சம்மன் அனுப்பி கண்டித்துள்ளது. பாகிஸ்தானில், சீக்கியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என வலியுறுத்தியுள்ளது.

Related Stories: