கவன ஈர்ப்பு நடைபயணம் நடத்த முயன்ற விவசாய சங்க நிர்வாகிகளின் வீடுகளில் போலீசார் மிரட்டல்

மணப்பாறை:  கரூர் மாவட்டம் மாயனூர் அணையில் இருந்து பொன்னணியாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து கால்வாய் மூலம் மணப்பாறை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தர வேண்டும் என பசுமை புரட்சி விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். சட்டமன்றம் கூடியுள்ள நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சட்டை அணியாமல் அரைநிர்வாண கோலத்தில் கவனஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு விவசாய சங்க நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்ற போலீசார், நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது. அப்படி சென்றால் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். அதையும் மீறி நேற்று காலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பசுமைபுரட்சி விவசாய சங்க நிறுவன தலைவர் கே.சி.பழனிசாமி தலைமையில் மாநில செயலாளர் செந்தில் உள்பட 10 பேர் வந்திருந்தனர். அவர்கள் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் நெற்றியில் நாமம் போட்டபடி பேனர் ஏந்தி புறப்பட தயாரானார்கள். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: