பதவியேற்பு விழாவில் சர்ச்சை மேட்டூர் அருகே தாய்க்கு பதில் உறுதிமொழி ஏற்ற மகன்

மேட்டூர்: மேட்டூர் அருகே ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில், தங்களின் அம்மாவுக்காக மகன்கள் உறுதிமொழி ஏற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 பேர் பதவியேற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சுசிலாராணி பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்நிலையில், 10வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற வெள்ளையம்மாள் என்பவருக்கு எழுதப்படிக்க தெரியாது என்பதால் அவரது மகன் திருப்பதி என்பவர் மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றார்.

அதேபோல், 9வது வார்டு கவுன்சிலர் ரத்தினம்மாள் என்பவருக்கு பதிலாக அவரது மகன் விமல்ராஜ் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரி உறுதிமொழியை வாசிக்க, உறுப்பினர்கள் அதனை திரும்ப கூறவேண்டும். ஆனால், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் விதிகளுக்கு மாறாக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் மகன்கள் உறுதிமொழி ஏற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரிகள் ஆட்சேபனை செய்யாமல் அமர்ந்திருந்தது விதிகளுக்கு முரணானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

Related Stories: