சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு நிதி: முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் டிசம்பர் 3ம் தேதி காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தைச்  சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பண்ருட்டி அருகே, மானாடிகுப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் செய்தியை அறிந்த உடனேயே, சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து  கொடுக்குமாறு பிரதமர் மோடியை கடந்த டிசம்பர் 4ம் தேதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராமகிருஷ்ணன்,  ஜெயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: