உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்க தடை கோரி வேட்பாளர்கள் ஐகோர்ட் நீதிபதியிடம் முறையீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடை கோரி, வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையீடு செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதில் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் இன்று காலை அந்தந்த மாவட்ட கலெக்டர்,  பஞ்சாயத்து யூனியன், பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவியேற்கிறார்கள். இந்நிலையில், பதவியேற்புக்கு தடை விதிக்க கோரி முறையீடு செய்வதற்காக சில வேட்பாளர்கள் நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டிற்கு வந்தனர். ஆனால், தலைமை நீதிபதி வீட்டில் இல்லை.

இதனால், நீதிபதி ஆதிகேசவலு வீட்டுக்கு சென்றனர். அப்போது வக்கீல் நீலகண்டன், திருவண்ணாமலை, தர்மபுரி, மன்னார்குடி, திருவள்ளூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது,  எனவே நாளை (இன்று) பதவியேற்க உள்ள ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். இதற்கு நீதிபதி, தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் விசாரிக்க முடியாது என்றார். இதனையடுத்து நீதிபதி சத்தியநாராயணனிடம் சென்று முறையீடு செய்தனர். ஆனால் நீதிபதி அனுமதித்தால் விசாரிப்பதாகவும், நாளை (இன்று)  நீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் வழக்கு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: