தேர்தல் முடிவை பாடமாக கொண்டு அதிமுக அரசுபேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றைப் புறக்கணித்து சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டுமென்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். திமுக கூட்டணிக்கு தமிழ்ச்சமூகம் மிகப்பெரும்பான்மையான  சதவீத அளவில் மகத்தான வெற்றியை வழங்கியிருப்பது அதிமுக கூட்டணிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலின்போது நிலவிய அதே எதிர்ப்புநிலை தொடர்ந்து நீடிப்பதை உணர்த்துகிறது.  

இக்கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, 31 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 40க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இத்தகைய கணிசமான வெற்றியை   விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ள தமிழக மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ள அதிமுக மற்றும் அதன் தோழமை  கட்சிகளுக்குப் பாடம் புகட்டும் வகையிலும் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. எனவே, இனிமேலாவது அதிமுக  பாஜவுடன் கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம். அத்துடன், இம்முடிவுகளிலிருந்து  படிப்பினையாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றைப் புறக்கணித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமென்றும் நம்புகிறோம்.

Related Stories: