சித்தூர் மாங்காய் மண்டியில் சலுகை விலை வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்: 1 கி.மீ. தூரம் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்

சித்தூர்: சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் அருகே உள்ள உழவர் சந்தையில்  நபர் ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் ₹25 க்கு நேற்று வழங்கப்பட்டது.  உழவர் சந்தையில் கூட்டநெரிசல் அதிகமானதால் போலீசார் காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் கூட்ட நெரிசல் அதிகமாகியதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் காரணமாகவும், சித்தூர் மாங்காய் மார்க்கெட் பகுதிக்கு வெங்காய விற்பனை மாற்றப்பட்டது.

அங்கு பொதுமக்களுக்கு 5 கவுண்டர்கள் அமைத்து அதன் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வெங்காயம் விற்பனை செய்யாத நிலையில்  நேற்று முன்தினம் மீண்டும்  வெங்காயம் விற்பனை செய்வதாக  உழவர் சந்தை அதிகாரி பரமேஸ்வர் தெரிவித்தார். இதனால் நேற்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெங்காயத்தை வாங்குவதற்காக அலை மோதினர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் மாங்காய் மார்க்கெட்டில் இருந்து, கட்ட மஞ்சு பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

Related Stories: