முரசொலி அறக்கட்டளை நில விவகார புகாரை தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க கூடாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க கூடாது  என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தரப்பில் தேசிய பட்டியலின  ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகார் மீதான விசாரணைக்கு தேசிய பட்டியலின  ஆணையத்தின் துணைத் தலைவர் முன்பு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் 2019 நவம்பர் 14ம் தேதியும், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜனவரி 7ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.  இந்நிலையில், தேசிய பட்டியலின  ஆணையத்திற்கு முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் தேசிய பட்டியலின  ஆணையம் விசாரிக்க முடியாது என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், முரசொலி சொத்து முறையாக நிலஉரிமையாளர்களிடம் இருந்து விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.அந்த நிலத்தின் உரிமையானது 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம்தான் உள்ளது.   தாழ்த்தப்பட்டோர் மக்களின் பாதுகாப்பு, உரிமை மீறல், மற்றும் உரிமைமறுக்கப்படுவது தொடர்பான புகார்களை மட்டுமே தேசிய பட்டியலின  ஆணையம் விசாரிக்க முடியும். சொத்து தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். புகாரளித்தவர் பாஜகவின் மாநில செயலாளர்சீனிவாசன், பட்டியலினத்தை சேர்ந்தவர் அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த புகாரை ரத்து செய்ய வேண்டும். பாஜக பிரமுகர் சீனிவாசனுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் பஞ்சமி நிலங்களே இல்லை என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். ஆனால், இப்போது முரசொலி நிலம் தொடர்பாக புகார் கூறப்பட்டிருப்பதில் இருந்து இந்த புகார் உள் நோக்கம் கொண்டது என்பது தெரியவருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜக இந்த புகாரை அளித்துள்ளது. எனவே, முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின  ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:  முரசொலி அறைக்கட்டளை சார்பில், அதன் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், தேசிய பட்டியலின  ஆணையத்தின் துணை தலைவர் முருகன், முரசொலி அறக்கட்டளை மீது சென்னை பாஜக மாநில செயலாளர் ஆர்.சீனிவாசன் கொடுத்த புகாரை விசாரிக்க தடைகோரியுள்ளார். தேசிய பட்டியலின  ஆணைய துணைத்தலைவர் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரை 2020 ஜனவரி 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு 2019 நவம்பர் 19ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி தேசிய பட்டியலின  ஆணையம், நிலம் தொடர்பான வழக்கையும், மனுதாரரின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கையும் விசாரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.   தேசிய பட்டியலின  ஆணையத்தின் துணை தலைவர் வேல்முருகன் சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். அந்த நிகழ்ச்சி சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இது போன்ற செயல்பாடுகளை கொண்ட நபர் மனுதாரர் அறக்கட்டளையின் மீதான புகாரை விசாரிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று வாதிட்டுள்ளார். மத்திய அரசு சார்பில் வக்கீல் டி.சைமன் ஆஜராகி, மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகதேசிய பட்டியலின  ஆணைய துணை தலைவர் தவிர்த்து சம்மந்தப்பட்டஅதிகாரிகளிடம் உரிய தகவல்களை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாககூறியுள்ளார்.மனுதாரர் சார்பில், மூத்த வக்கீல் பி.வில்சன் கூறும்போது, டெல்லிமாநகராட்சிக்கும் லால்சந்த் என்பவருக்கும் இடையிலான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் சொத்து தொடர்பாக விசாரிக்க முடியுமா என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை சுட்டி காட்டியுள்ளார்.

 தேசிய பட்டியலின  ஆணையத்தின் விசாரணை வரம்பு கேள்வியில் உள்ள நிலையில் மனுதாரரின் சொத்து ஒப்பந்தம் தொடர்பாக சீனிவாசன் கொடுத்த, புகார் மீது ஆணையம் எப்படி விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் வாதிட்டார்.   சீனிவாசன் சார்பில், இதற்கு பதிலளிக்க உள்ளதாக அவரது வக்கீல் அஸ்வதமன் தெரிவித்துள்ளார். எனவே மனுதாரர், ஆணையத்திடம் உரிய ஆவணங்களை தர வேண்டும்.பட்டா மற்றும் அனைத்து ஆவணங்களையும் தர தேவையில்லை. ஆவணங்கள் தொடர்பான பட்டியல் குறித்த தகவல்களை மட்டும் தர வேண்டும்.  ஜனவரி 7ம் தேதி மனுதாரர் நேரில் ஆஜராக தேவையில்லை. அவரது சார்பில், அவரது பிரதிநிதி ஆஜராகலாம். தேசிய பட்டியலின  ஆணையத்தின் துணை தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் துணை தலைவர் முருகனுக்கு பதிலாக வேறு பொறுப்பான அதிகாரியை நியமிப்பார் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

சீனிவாசன் கொடுத்த புகாரில் முகாந்திரத்தை விளக்கும் வகையில் சம்மந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண், கதவு எண் எதுவும் தரப்படவில்லை. இதை மனுதாரரின் வக்கீல் எடுத்துரைத்துள்ளார்.  ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, தேசிய பட்டியலின  ஆணையம் சீனிவாசன் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்த கூடாது. புகார் மீது விசாரணை நடத்த தேசிய பட்டியிலின ஆணையத்திற்கு  எந்த வகையில் அதிகாரம் உள்ளது என்பது குறித்து உரிய விளக்கங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஆணையம் பதில் தர வேண்டும். வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: