புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் எத்தனை ஆசிரியர் பணியிடம் காலி? அறிக்கை தர உத்தரவு

சென்னை: புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து கல்லூரி முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி காலாப்பட்டுவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு எல்எல்பி படிக்கும் மாணவரின் தந்தை வக்கீல் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரிகளில் கவுரவ ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துகிறார்கள்.  திறமையான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் செமஸ்டர் தேர்வு ஜனவரி 6ம் தேதி (நாளை) நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பும்வரை வரும் 6ம் தேதி நடக்கவுள்ள செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் காலியாக ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிக்கையை வரும் 8ம் தேதி கல்லூரி முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: