சட்டத்துக்கு எதிரானது என தீர்ப்பு பேரவை செயலாளர் பதவி ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

பெங்களூரு: அரசியல் நெருக்கடிக்கு பணிந்து நியமனம் செய்யப்படும் பேரவை செயலாளர் பதவி சட்டத்திற்கு எதிரானது. இனிமேல் இதுபோன்ற பதவிகளை நியமிக்ககூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு பலர் முயற்சித்தனர். அவர்களை சமாளிக்கும் நோக்கத்தில் அமைச்சர் பதவிக்கு இணையான பேரவை செயலாளர் பதவி 3பேருக்கு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டபேரவைகளில் மொத்தமுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் மட்டுமே அமைச்சர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. ஆனால், அதிருப்தி யாளர்களை சமாளிக்க பேரவை செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அதற்கு கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான தகுதி கொடுப்பதுடன் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் 164 (1-ஏ) பிரிவின் கீழ் பேரவை செயலாளர் பதவி சட்டத்திற்கு எதிரானது.

ஆகவே சட்ட விதிக்கு எதிராக செய்துள்ள நியமனம் ரத்து செய்யப்படும். அவர்களுக்கான சலுகைகள் திரும்ப பெறவேண்டும். இனி இதுபோன்ற பதவிகளை உருவாக்க கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர். இப்போதைய முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சரவை விஸ்தரிப்பின் போது 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு பேரவை செயலாளர் பதவி வழங்க முடிவு செய்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பு, முதல்வரின் முடிவுக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories: