நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுத்தாக்கல்

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை திருத்தியதை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற அரசாணையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்தது. இதில் தமிழகத்திற்கு 2016-ம் ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மனுவில் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எழுதி மருத்துவ படிப்புகளில் சேர முடியாத சூழல் உருவாகிறது. எனவே நீட் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டும் தான் நீட் தேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. வேறு சில மாநிலங்களும் நீட் தேர்வு தொடர்பாக வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (ஜன.6) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: