சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : தமிழகத்தில் 256 இடங்களில் அமைகிறது

டெல்லி : சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் விடும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யும் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் வாகன தயாரிப்பு (எஃப்ஏஎம்இ -இந்தியா 2) திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 62 நகரங்களில் 2,636 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகத்தில் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, வேலூர், சேலம், தஞ்சை, ஈரோடு மாவட்டங்களில் சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திராவில் 266, தமிழ்நாட்டில் 256, குஜராத்தில் 228, ராஜஸ்தானில் 205, உத்தரப்பிரதேசத்தில் 207, கர்நாடகாவில் 172, மத்திய பிரதேசத்தில் 159, மேற்கு வங்கத்தில் 141, தெலுங்கானாவில் 138, கேரளாவில் 131, டெல்லியில் 72, சண்டிகரில் 70 , ஹரியானாவில் 50, மேகாலயாவில் 40, பீகாரில் 37, சிக்கிமில் 29, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் சத்தீஸ்கரில் தலா 25, அசாமில் 20, ஒடிசாவில் 18 மற்றும் உத்தரகண்ட், புதுச்சேரி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா 10 சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Related Stories: