கிறிஸ்தவ பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெளிநாடு போனதுமே பீப் சாப்பிடுகிறார்கள்: மத்திய அமைச்சர் விரக்தி

பெகுசராய்: ‘‘வெளிநாட்டுக்கு சென்றதும், இந்திய மாணவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தொடங்குகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர்கள் நம் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தின் மதிப்பையும் கற்றுத் தராததுதான்,’’ என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கவலை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், பெகுசராயில் நேற்று நடந்த ‘பகவத் கதா கயாபன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: மிஷனரி (கிறிஸ்தவ) பள்ளிகளுக்கு நாம் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறோம். பின்னர், ஐஐடி மூலமாக இன்ஜினியராகி, அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். அங்கு சென்றதுமே மாட்டிறைச்சி சாப்பிடத் தொடங்குகிறார்கள். ஏன்? ஏனெனில்., நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மதிப்பையும் கற்றுத் தருவதில்லை.

அதன்பின், பிள்ளைகள் எங்களை கவனித்துக் கொள்வதில்லை என பெற்றோர் புலம்புகிறார்கள். எனவே, நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையின் சுலோகங்களை போதிக்க வேண்டியது அவசியமாகிறது. 100 வீடுகளில் எடுக்கப்பட்ட சர்வே முடிவு ஒன்றில், 15 வீடுகளில் மட்டுமே ஹனுமன் சாலீசா பக்தி பாடல் புத்தகம் இருப்பதாகவும், 3 வீடுகளில் மட்டுமே கீதை ராமாயணம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே, பிள்ளைகளை மட்டும் குறை சொல்லி ஒரு பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘நம் கலாச்சாரத்தை காப்பாற்றினால் தான் இந்தியா பிழைத்திருக்கும்,’’ என்றார்.

Related Stories: