பட்டா கிடைத்தும் பிரச்னை தீரவில்லை: மலைக்கோட்டை பராமரிப்பில் அரசு துறைகள் இடையே மோதல்... நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டைக்கு பட்டா கிடைத்தும், அரசு துறைகள் இடையே நிலவும் மோதல் காரணமாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த இந்த மலைக்கோட்டை, நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.  தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை 240 அடி உயரம்  கொண்டதாகும். மலைக்கோட்டையின் மீது பெருமாள் கோயிலும், தர்காவும் அமைந்துள்ளது. குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான், இந்த கோயிலுக்கு பொதுமக்கள்  வருகிறார்கள். ஆனால், ஆண்டு முழுவதும் காதல் ஜோடிகள் கொஞ்சி குலாவும் இடமாக மலைக்கோட்டை மாறி விட்டது. இந்த மலைக்கோட்டை  தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுக்கு முன், மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் படிக்கட்டு வசதி ஏற்படுத்தப்பட்டது.

மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள இடங்கள், வருவாய்த்துறை ஆவனங்களில் அரசு புறம்போக்கு என இருந்தது. அதை  தொல்லியல் துறையின் பெயரில் பட்டா போட்டு தரவேண்டும்  என, கடந்த 5 ஆண்டுக்கு முன் தொல்லியல் துறை அதிகாரிகள் விண்ணப்பம்  செய்தனர். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள வீடுகள், கடைகளை தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்து பட்டா வழங்கி விட்டனர். ஆனால், மலைக்கோட்டையை சுற்றியுள்ள 50 கடைகள் நரசிம்ம சுவாமி கோயில் மூலம் ஏலம் விடப்பட்டு,  மாத வாடகை பெறப்பட்டு   வருகிறது. இந்த கடைகளை முழுமையாக அகற்றி கொடுத்தால் தான், முழு மலைக்கோட்டையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும். ஆனால், கோயில் அதிகாரிகள் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க விரும்பாமல், தொல்லியல் துறைக்கு எதிராக நீதிமன்றத்தில்  கடைக்காரர்கள் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 3 மாதத்துக்கு முன், தொல்லியல் துறை அதிகாரிகள் மலைக்கோட்டையை ஆக்கிரமித்து  கடைகள், வீடுகள் வைத்துள்ளவர்களை  காலி செய்யும்படி நோட்டீஸ் அளித்தனர். ஆனால் கடைக்கரர்கள் காலி செய்ய மறுத்து நீதிமன்றம் சென்றுள்ளனர். இதனால் பட்டா கிடைத்தும், தொல்லியல் துறை அதிகாரிகளால், மலைக்கோட்டையை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக, மலைக்கோட்டையில் நடைபெறும் சமூக விரோத செயல்களை, தொல்லியல் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. திருட்டு, கொள்ளையை  தடுக்க ஊரெங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வரும் காவல்துறையினர், மலைக்கோட்டையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை கூட பொருத்த முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள்

முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

Related Stories: