பராமரிப்பின்றி பாழான வள்ளியூர்- கன்னியாகுமரி புறவழிச்சாலை தொடர் மழையால் உருக்குலைந்த அவலம்: விரைவில் சீரமைக்கப்படுமா?

வள்ளியூர்: பராமரிப்பின்றி பாழான வள்ளியூர்- கன்னியாகுமரி புறவழிச்சாலை தொடர் மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இது விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மையாக வள்ளியூர் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் புறவழிச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள், கூடங்குளம் செல்லும் கனரக வாகனங்கள், நெல்லை- நாகர்கோவில் செல்லும் புறவழிச்சாலை பஸ்கள், இருசக்கர வாகனங்கள் என தினமும் பல்வேறு வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்த தவறுவதில்லை.

இருந்தபோதும் முறையான பராமரிப்பின்றி இச்சாலை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக பாழ்பட்டு வந்தது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றும் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக வள்ளியூரிலிருந்து - கன்னியாகுமரி செல்லும் புறவழிச்சாலை மேம்பாலத்தின் சாலை மிகவும் மோசமாக  குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனிடையே அண்மையில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் தற்போது இச்சாலை குண்டும், குழியுமாக மேலும் உருக்குலைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இனியாவது இச்சாலை சாலை விரைந்து சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

ராட்சத பள்ளத்தால் விபத்து

இதுகுறித்து நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம்   கூறுகையில், ‘‘வள்ளியூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் புறவழிச்சாலை மேம்பாலத்தின் சாலை முறையான பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்தது. அண்மையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் ராட்சத அளவில் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு குண்டும், குழியுமாக மாறியுள்ள இச்சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு தொலைவில் வரும்போது இந்த ராட்சத குழிகள் தெரியாததால்   அவ்வப்போது விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். இதே போல் காவல்கிணறு, ஆரல்வாய்மொழி,   நாகர்கோவில்- கன்னியாகுமரிக்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள், பஸ்சில் பயணிக்கும் பயணிகள் என அனைத்துத்தரப்பினரும் படாதபாடு படுகின்றனர். எனவே, கனரக வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில்  மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக இச்சாலையை முறையாக சீரமைக்க முன்வரவேண்டும்’’ எனறார்.

Related Stories: