நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: போதை பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க சிறப்புக்குழு: போலீஸ் தகவல்

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரிசார்ட் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் பயன்படுத்துவதை கண்காணிக்கவும் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல ேபாதை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ள நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. குறிப்பாக இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெளிநாடுகளில் இருந்து சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலால் அதிகளவில் ஹெராயின், கோகைன் ஆகியவை சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் சர்வதேச  போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி தென்மண்டல  போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2020 புத்தாண்டின் போது சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்கள், பண்ணை வீடுகளில் அதிகளவில் கோகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் பயன்படுத்த உள்ளதாக தென்மண்டல போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சென்னையில் போதை பொருட்கள் பயன்படுத்தும் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்கள், பண்ணை வீடுகளை ரகசியமாக கண்காணிக்கவும் விநியோகத்தை தடுக்கவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீதும், பயன்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2,350 கிலோ பறிமுதல்

தமிழகத்தில் 2018ம் ஆண்டு போதை  பொருட்கள் பதுக்கியது மற்றும் விற்பனை செய்ததாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6  வெளிநாட்டினர் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2,345  கிலோ, 110 கிராம் ஹெராயன், 14.496 கிலோ கோகேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: