மகாராஷ்டிராவில் ஆட்டத்தை ஆரம்பித்தாரா அமித்ஷா?: அமைச்சரவையில் இடமில்லாத 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி...சிறிய கட்சிகளும் வேதனை

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி  அரசு பதவியேற்று ஒரு மாதத்துக்கு பிறகு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. விதான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் 36 பேர்  அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார்.

பதவியேற்ற 36 அமைச்சர்களில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 10 கேபினட் அமைச்சர்களும் 4 இணையமைச்சர்களும் அடங்குவர். சிவசேனா சார்பில்  7 கேபினட் அமைச்சர்கள் 4 இணையமைச்சர்கள் பதவியேற்றனர். காங்கிரஸ் சார்பில் 8 கேபினட் அமைச்சர்கள் 2 இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான  அசோக் சவான் மற்றும் சிவசேனா இளைஞரணியான யுவசேனா தலைவரும், முதல்வர் உத்தவ் தாக்ரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே ஆகியோர்  கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். தற்போது அமைச்சரவையில் முதல்வர் உட்பட மொத்தம் 43 அமைச்சர்கள் உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்றைய பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் சார்பில் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஆனால், கட்சியில் மூத்தவர்களான  தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் தலைமையில் 6 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவரும்,  மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளருமான மல்லிகார்ஜுன கார்கேயே சந்தித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரகாஷ் சோலங்கி என்பவர் தமது பதவியை ராஜினாமா  செய்ய முடிவு செய்துள்ளார். இதனை கொண்டு பாஜக தலைவர் அமித்ஷா தனது ஆட்டத்தை மகாராஷ்டிராவில் ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

சஞ்சய் ராவுத் அதிருப்தி?

நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவராகவும்  கருதப்படும் சஞ்சய் ராவுத் கலந்து கொள்ளவில்லை. அவரது தம்பி சுனில் ராவுத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என சஞ்சய்  எதிர்பார்த்ததாகவும் ஆனால், தம்பிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ள சஞ்சய் ராவுத், பதவியேற்பு விழாவை  புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி சஞ்சய் ராவுத் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கழட்டி விடப்பட்ட சிறிய கட்சிகள்

சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சுவாபிமாண் சேத்கரி சங்கட்டனா, பகுஜன் விகாஸ் அகாடி, சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும்  ஆதரவளித்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் சேர்ந்தன. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இந்த கட்சிகள்  கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், இந்த கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.

Related Stories: