புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடும் கட்டுப்பாடுகள் சென்னையில் 368 இடங்களில் சோதனை

* மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

* போதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

* குற்ற ஆவண காப்பகத்தில் சேர்ப்பதால் பாஸ்போர்ட் கிடைக்காது

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 368 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போதையில் சிக்கினால் டிரைவிங் ைலசென்ஸ் ரத்து, பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சென்னை போலீஸ் அறிவித்துள்ளது. 2020 ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. புத்தாண்டு பிறப்பதையொட்டி மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். அதற்காக இரவு 8 மணியில் இருந்து மக்கள் வரத்தொடங்கிவிடுவார்கள். மேலும் சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதி மற்றும் பண்ணை வீடுகளில் சிறப்பு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. இந்த வருடத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரப்படி 2500 போக்குவரத்து காவலர் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடற்கரை பகுதியில் 3 ஆயிரத்து 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் போன்ற கடற்கரையில் கொண்டாட்டம் என்ற பெயரில் யாரேனும் இளம் பெண்களை கேலி செய்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 500 போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ரிசார்ட்டுகள், பங்களாக்களையும் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்கவுள்ளனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எவரேனும் அத்துமீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.மேலும் பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் வகையில் மயிலாப்பூர், அடையாறு, கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அம்பத்தூர், மாதவரம், புளியந்தோப்பு, அண்ணாநகர், பூக்கடை, பரங்கிமலை உள்ளிட்ட மாநகரம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு ெசய்து போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கையை மேற்கொள்ள உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், பாஸ்போர்ட், விசாவிற்கு போலீஸ் சான்றிதழ் வழங்கப்படாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் முதல் நள்ளிரவு வரை பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை 20 இடங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்படுகிறது. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் பைக்கில் ரோந்து செல்கிறார்கள். கோயில்கள், தேவாலயங்கள் கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என மொத்தம் 100 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்தை கண்காணிக்க மணலில் செல்லக்கூடிய ஏடிவி வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து செல்கின்றனர். மெரினா கடற்கரை ஓரத்தில் குதிரைப்படையினர் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்க இன்று இரவு 11 மணி முதல் 3 மணி வரை பாலங்களில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புத்தாண்டை விபத்து மற்றும் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல் கொண்டாடும் வகையில் சென்னை முழுவதும் 51 இடங்களில் மருத்துவர்கள் குழு கொண்ட ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மெரினா கடற்கரை, நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 37 ஆம்புலன்ஸ்களும், நான்கு சக்கர ஆம்புலன்ஸ்சுகளும், 13 இரண்டு சக்கர ஆம்புலன்ஸ்களும், ஹாட் ஸ்பாட் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் உள்ளது. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது. அதோடு இல்லாமல் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Related Stories: