158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்துள்ளது. மேலும் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குபதிவு கடந்த 27ம்தேதி நடைபெற்றது. அப்போது, 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்தது. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டது. வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டது.

முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 76 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குச்சாவடி சூறையாடல், வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மொத்தம் 91,975 பதவிகளில் 45,336 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில், 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன் படி, இன்று காலை 7 மணிக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

முதல் கட்ட தேர்தலின் போது வாக்குசாவடிகளை கைப்பற்ற முயற்சி போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் பதற்றமான வாக்குசாடிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய 2-ம் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

3 மணி நிலவரப்படி

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குபதிவில் 3 மணி நிலவரப்படி 27 மாவட்டங்களில் 61.45% வாக்குப்பதிவு நடந்துள்ளது. முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

Related Stories: