வரியை உயர்த்தினால் வரி ஏய்ப்பு அதிகரிக்கும்: விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி முறையை அவசர, அவசரமாக போர்க்கால அடிப்படையில் அமல்படுத்தியது. இந்த ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு 89 முறை கவுன்சலிங் கூட்டம் கூட்டி, ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி வரியில் அரசு மாற்றம் செய்து கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக, ஆரம்பத்தில் ஜிஎஸ்டி வரி செயல்திட்டத்தில் குளறுபடி இருக்கிறது என்பதை நிரூபித்து ெகாண்டே இருக்கிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு நெருக்கடியும், அப ராதம் விதிப்பது என்று வணிகர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என்று கோரிக்கையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், இப்போது சூப்பர் மார்க்கெட் உட்பட பல்வேறு கடைகளில் நுழைந்து அதிகாரிகள் வரி இல்லாத பொருட்களுக்கு கூட வரி ஏன் வசூலிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி, வியாபாரிகளுக்கு பல கோடி, பல லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர்.

 அரசு, அவர்கள் செய்த குளறுபடிகளை, தவறுகளை மறைக்க வியாபாரிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இயங்கி கொண்டிருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துகின்ற வகையில், மிக குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்வதால் அங்கு அரசுக்கு தர வேண்டி வரி, ஏய்ப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக, அரை கிலோ நெய் ரூ.250க்கு விற்பனை செய்கிறோம். நாங்கள் 5 சதவீதம் என்கிற முறையில் ரூ.12.50 ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறோம். ஆனால், அதே நெய்யை சூதாட்ட முறையில், மக்களை கவர வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 சலுகை விற்பனையில் செய்கின்றனர். இதன் மூலம் அரசு வருவாய் ரூ.12.50 மோசடி செய்யப்படுகிறது. அதே போன்று பல பொருட்களுக்கு விலை குறைத்து மக்களை ஏமாற்றும் முகமாக செய்கிற போது அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தை எப்படியாவது சீரழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால் வரி வருவாய் குறைகிறது. இதை கண்டுபிடித்து ஜிஎஸ்டி வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவதை கட்டாயமாக்கிட கூடாது. அதே போன்று சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். இந்த சட்டத்தை புரிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்த வேண்டும் என்று பேரமைப்பு வலியுறுத்தி வருகிறது. வரி விகிதம் குறைந்து இருக்கிறது என்றால் அதை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் ஆய்வு செய்யாமல், வரியை உயர்த்திக் கொண்டே போனால் அது அரசுக்கு தோல்வியை தரும். வரி போட்டு வசூலிக்கிற மாநிலத்தில் தமிழகம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வட மாநிலங்களில் இன்னமும் பில் போடாமல் வியாபாரம் செய்கிற நிறுவனங்கள் கணிசமாகவே உள்ளது.

ஆகவே, அந்த மாநிலங்களில் எல்லாம் நுழைந்து ஆய்வு செய்து வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே வரி வசூல் அதிகரிக்கும். மாறாக, வரியை உயர்த்தினால் வரி ஏய்ப்பு அதிகமாகி விடும். இந்தியாவில் 130 கோடி மக்களும் வரியை செலுத்தி பொருளை வாங்க வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டுமே தவிர வரி உயர்வு என்பதை அரசு கைவிட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்டால் தமிழக வணிகர்களும், இந்திய வணிகர்களும், மக்களும் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும். இந்திய பொருளாதாரத்தை எப்படியாவது சீரழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால் வரி வருவாய் குறைகிறது.

Related Stories: