அனைத்து அலுவலகங்களையும் இணைக்க ஒருங்கிணைந்த இணையதளம் அறிமுகம் : மின்வாரியம் திட்டம்

சென்னை: அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைக்கும் இணையதளத்தில், கூடுதல் தகவல்களை சேர்க்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்துக்கு சென்னை-2, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் மூலமாக மின் விநியோகம் செய்தல், கணக்கு எடுத்தல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், போன்ற பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் சர்வரில் சேமித்து வைக்கப்படும். இதை அந்ததந்த மண்டல அலுவலகங்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற அலுவலகங்களில் இருப்போர் தேவைப்படும் பட்சத்தில், அதற்குரிய அலுவலகத்தில் கேட்டே பெற வேண்டும். இதைப்போக்கும் வகையில், இணையதளத்தில் அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. முன்னதாக போக்குவரத்துத்துறையில் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் ஒரே இணையதளத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் இத்திட்டத்தில் புதிதாக கூடுதல் தகவல்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் கொள்முதல், தளவாடங்கள் இருப்பு; புதிதாக மேற்கொள்ளப்படும் மற்றும் முக்கிய பணிகள்; மேலாண்மை; தர மேலாண்மை; விற்பனை மற்றும் விநியோகம்; மனித மூலதன மேலாண்மை; நிதி மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட விபரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்மூலம் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மேலும் தலைமை அலுவலகத்தில் இருந்து மற்ற இடங்களில் நடக்கும் பணியை எளிதாக கண்காணிக்கலாம். தற்போது இந்தபணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்டம், மண்டலம், அனல் மின்நிலையம், நீர் மின்நிலையம், காஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் பிரத்தியேக குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழு சம்பந்தப்பட்ட தகவல்களை சேமித்து, ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: