குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கும் மாநிலங்களில் உள்ள மக்களின் குரல்களை கேட்க பாஜக அரசு தயாராக இல்லை: ராகுல் காந்தி பேச்சு

திஸ்பூர்: நாட்டு மக்களை மத ரீதியில் பிரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாடியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 134வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அக்கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் மற்றும் இந்தியாவை காப்பாற்றுவோம் என்ற பெயரில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியின் இன்று பேரணி நடத்துகின்றனர். அதன் ஒரு கட்டமாக டெல்லியில் அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்சியின் கொடிக்கு அக்கட்சியின் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பேரணி மற்றம் பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சியினர் முடிவு செய்திருந்தனர். அதன் அடைப்படையில் அசாம் மாநிலம் குவாஹாத்தியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது; நாட்டு மக்களை மத ரீதியில் பிரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து அசாம் மாநிலத்தை வன்முறை மாநிலமாக மத்திய அரசு மாற்றிவிட்டது. அசாம் மாநில கலாச்சாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை தடுப்போம்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்கள், மாணவர்களை பாஜக அரசு குறிவைக்கிறது. போராட்டம் நடக்கும் மாநிலங்களில் உள்ள மக்களின் குரல்களை கேட்க பாஜக அரசு தயாராக இல்லை என கூறினார். மேலும் பேசிய அவர் நாட்டின் பொருளாதாரத்தை மத்திய பாஜக அரசு சீரழித்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: