குடியாத்தம் அருகே நண்டு வளர்ப்பில் முதலீடு செய்த வாலிபரிடம் 2.5 கோடி நூதன மோசடி: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

வேலூர்: குடியாத்தம் அருகே நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்த வாலிபரிடம் 2.5 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தண்டபாணி(38). நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்த தன்னை ஏமாற்றி 4 பேர் கும்பல் ஒன்று  2.5 கோடிக்கு மோசடி செய்ததாக, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 16ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் தலைமுடி வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தேன். என் சொந்த தேவைக்காக எனது செல்போனில் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலம் கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த சம்பத் என்பவர் எனக்கு அறிமுகமானார்.

நண்டு குஞ்சு வளர்ப்பில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார். 10 மாதங்களில்  இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். மேலும், ரேணுகாதேவி என்பவரையும் அறிமுகம் செய்தார்.

இதையடுத்து எனது சேமிப்பு பணம், மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து கடனாக பெற்று 10 லட்சத்தை சம்பத், ரேணுகாதேவி ஆகியோர் மூலமாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இதன் மூலமாக ஆதித்யகுமரன், லட்சுமணன், முருகேசன், வெங்கட் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2.5 கோடி வரை பல தவணைகளாக பணம் செலுத்தினேன். ஆனால் இது நாள் வரையிலும் எனக்கு பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே, நண்டு தொழில் முதலீட்டில் நான் செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: