சபரிமலையில் 41 நாள் மண்டல காலம் இன்றுடன் நிறைவு; மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகள் இன்றுடன் நிறைவடைகிறது. சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கபப்ட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. தினமும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் நடந்தன. கடந்த வருடத்தைவிட இவ்வருடம் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. இது குறித்து சபரிமலையில் நேற்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியது; இந்த மண்டல காலத்தில் கடந்த 39 நாளில் கோயில் மொத்த வருமானம் 156 கோடியே 60 லட்சத்து 19 ஆயிரத்து 661 ஆகும். கடந்த வருடம் இதே நாளில் 105 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 864 ரூபாயாகும். கடந்த ஆண்டை விட ரூ.51 கோடிக்கு மேல் அதிகம் கிடைத்துள்ளது.

அரவணை பிரசாதம் விற்பனை மூலம் தான் அதிகமாக 67 கோடியே 76 லட்சத்து 87 ஆயிரத்து 780 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இது 40 கோடியே 98 லட்சத்து 91ஆயரித்து 175 ரூபாயாகும். உண்டியல் மூலம் 53 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரத்து 95 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் மணியாடர் மூலம் 80 ஆயிரத்து 580 ரூபாய் காணிக்கை வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிரிசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்துக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த தங்க அங்கி ஊர்வலம் ேநற்று மதியம் பம்பையை அடைந்தது. பக்தர்களின் வழிபாட்டுக்காக பம்பை கணபதி கோயிலில் அங்கி வைக்கப்பட்டது.

மாலையில் அங்கி ஊர்வலமாக சன்னிதானத்துக்கு எடுத்து வரப்பட்டது. மாலை 6.25 மணியளவில் தங்க அங்கி 18ம் படி வழியாக கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பன் விக்ரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது.

இன்று மண்டல பூஜையையொட்டி காலை 8 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. காலை 10 மணிக்கும் 11.40க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இன்றுடன் 41 நாள்கள் நடந்த மண்டல காலம் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று மற்ற நாட்களை விட கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து வரும் 28, 29 ஆகிய நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தெரியும்.

Related Stories: