கண் சிகிச்சைகளுக்கு உதவுவதாக கூறி செல்போன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்

சென்னை: கண் சிகிச்சைகளுக்கு உதவுவதாக கூறி  பிரபல கண் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி செல்போன் மூலம் ஒரு கும்பல் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. வங்கி  கணக்கு எண்ணை சொல்லுங்கள், கிரெடிட் கார்டு எண்ணை  சொல்லுங்கள் என செல்போனில் தினசரி பல மோசடி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதில் பலர் பாதிக்கப்பட்டு தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில்,  பிரபல தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் பிரபல கண் மருத்துவமனையின் பெயரால் செல்போனில் பண மோசடி அழைப்பு வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையுடன் இணைந்து சைட் சேவர்ஸ் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனமும் பல்வேறு சேவைகளில் பங்கெடுத்து வருகிறது.  இந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் பெயரைச் சொல்லி செல்போனில் ஒரு பெண் அழைத்து நன்கொடை வசூலிப்பதாக கூறி  வருகிறார்.  ஆண்டுக்கு 675 ரூபாய் வசூலிப்பதாகவும் அதை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக செலவழிப்பதாகவும் அந்த பெண் கூறுகிறார்.  வாடிக்கையாளரின் வீட்டிற்க்கே இரண்டு நபர்களை அனுப்பி பணத்தையும் ஆவணங்களையும் சேகரித்துக்கொள்வதாகவும்  அந்த பெண் கூறுகிறார். 

ஒருகட்டத்தில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு எண், கையெழுத்து நிரப்பப்படாத  காசோலை ஆகியவற்றை கேட்கும் இந்த பெண் அவற்றை நேரில் வந்து வாங்கிக்கொள்ள ஆள் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். இந்த மோசடி செல்போன் அழைப்பு தொடர்பாக சங்கரா கண் மருத்துவமனையின் செயல் இயக்குனர் சங்கரன் அவர்களை கேட்டபோது பொது மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படுவதாகவும் அந்த தொகைக்கு யாருக்கு சிகிச்சை அளிக்கபடுகின்றது என்பது வரையிலான தகவல்கள் நன்கொடையாளருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  இதுபோன்ற மோசடி அழைப்புகளால் உண்மையில் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் முன்வர தயங்கும் சூழலை மோசடி கும்பல் உருவாக்கி விடுகிறது.  இதுபோன்ற அழைப்புகளை பொறுத்தமட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மட்டுமின்றி அழைப்புகளில் சொல்லப்படும் தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து விடுவதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்கின்றனர் போலீசார்.  

Related Stories: