ஜார்க்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரனை சாதி ரீதியாக விமர்சித்ததாக புகார்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரனை சாதி ரீதியாக விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16 என அதன் கூட்டணி மொத்தமாக 47 இடங்களை கைப்பற்றியது.

பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். இதற்கான பதவியேற்பு விழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலம் மிகிஜாம் காவல் நிலையத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் மீது கடந்த டிசம்பர் 19ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில் ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை சாதி ரீதியாக அவதூறாக விமர்சித்ததாக கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் முதல்வர் ரகுபர் தாஸ்க்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை ஜம்ரதா மாவட்ட எஸ்பி அனுஷ்மான் குமார் தெரிவித்துள்ளார். எஸ்சி-எஸ்டி தடுப்பு சட்டத்தின் கீழ் ரகுபர் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த புகார் குறித்து புதன்கிழமை ஜம்தாராவின் மிஹிஜாமில் நடந்த கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், எனது சாதி மீது ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் மீது டும்காவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார். மேலும் பேசிய அவர், ரகுபர் தாஸின் வார்த்தைகள் என் உணர்வையும் மரியாதையையும் புண்படுத்திவிட்டது. ஒரு பழங்குடி குடும்பத்தில் பிறப்பது குற்றமா? என்று தெரிவித்திருந்தார்.

Related Stories: