ஆம்பூர் அருகே 3வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம்: நடிகருக்கு சொந்தமான பயிர்கள் உட்பட 4 ஏக்கர் சேதம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே 3வது நாளாக விவசாய நிலத்தில் புகுந்த யானைகள் நடிகருக்கு சொந்தமான பயிர்கள் உட்பட சுமார் 4 ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த யானை கூட்டம் மாச்சம்பட்டு பகுதியில் சுமார் 7 ஏக்கர் வாழை, தென்னை, தக்காளி மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தின. இந்நிலையில், நேற்று அதிகாலை ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் ஊராட்சி பெங்கள்மூலை வனப்பகுதியில் இந்த யானை கூட்டம் முகாமிட்டிருந்தது. பின்னர், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி மற்றும் கிருஷ்ணமந்திரி பள்ளித்தெருவைச் சேர்ந்த முரளி, தரணி ஆகியோர் நிலங்களில் இருந்த பல்வேறு பயிர்கள், மரங்கள், வேலிகள் ஆகியவற்றை துவம்சம் செய்தது.  

தொடர்ந்து கிருஷ்ணம்மா கானாறு, துருஞ்சித்தலை மேடு வழியாக நேற்று மதியம் பிக்கலமலை வனப்பகுதி வழியாக புகுந்த யானை கூட்டம் மிட்டாளம் ஊராட்சி பைரபள்ளியில் முகாமிட்டது. இதையடுத்து வனசரகர்(பொறுப்பு) இளங்கோவன், வனவர் சதீஷ், வனக்காப்பாளர்கள் யானைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று 3வது நாளாக அதிகாலையில் ஆம்பூர் அடுத்த  பந்தேரப்பள்ளி அருகே  காட்டு யானைகள் முகாமிட்டன. அங்கு பெங்களூரை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் நவரசன் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்தன.

மேலும் அதே பகுதியில் உள்ள ராமமூர்த்தியின் ஓலைக்குடிசை மற்றும் சிவா என்பவரது நிலத்தில் இருந்த நெற்பயிர், ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான வாழை உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்தின. முன்னதாக அவற்றை அப்பகுதி இளைஞர்கள் விரட்ட முயன்றனர். இதனால் யானை கூட்டம் இரண்டாக பிரிந்தது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்பு இன்று காலை 4 மணியளவில் இந்த யானைகள் மீண்டும் ஒன்று கூடின. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று இரவு முதல் தூக்கத்தை தொலைத்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தபடி இருந்தனர். இன்று காலை 6 மணியளவில் யானை கூட்டம் பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பைரவர் குட்டை என்னுமிடத்தில் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: