ஊரக உள்ளாட்சி தேர்தல் பூத் சிலிப் விநியோகத்தை இன்றுக்குள் முடிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியை இன்றுக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 35,611 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22, 776 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பார்களும் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று 27 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், தேர்தர் பிரிவு காவல் துறை தலைவர் சேஷசாய், காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு தேவையான பொருட்களை தயார் நிலை வைத்திருத்தல், மண்டல அளவிலான வரைபடம் தயார் செய்து குழுக்கள் மற்றும் அலுவலர்கள் நியமித்தல், பதற்றமான வாக்குச்சாவடி பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தல், இணைய வழி கண்காணிப்பாக வசதிகளை ஏற்பாடு செய்தல், மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைத்தல், நுண் பார்வையாளர்களை நியமனம் செய்தல், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்குதல், தேர்தல் செலவினங்களுக்கு நிதி வழங்குதல், வாக்குச்சாவடி மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியை இன்றைக்குள் முடிக்க வேண்டும் என்றும், முதல் கட்ட தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 26ம் தேதிக்குள் பணி ஆணை வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தினார்.

Related Stories: