சாலையில் குப்பை வீசுவதை தடுக்க கோலம் வரைந்து விழிப்புணர்வு: துப்புரவு ஆய்வாளர் நூதன முயற்சி

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் பொதுமக்கள் தங்களது குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைை கொட்டுவதற்கு மாநகராட்சி சார்பில்  தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகாலை மற்றும் இரவு என 2 முறை மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிகளில் உள்ள குப்பை அகற்றப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. லாரிகள் செல்ல முடியாத தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் ரிக்சா வண்டிகள் மூலம் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். குப்பையை மறு சுழற்சி செய்வதற்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும், என மாநகராட்சி பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளது. ஒரு சிலர் இதை கடைபிடித்தாலும் பலர் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வெளியே செல்லும்போது சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், பல இடங்களில் சாலையோரம் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி 8வது மண்டலம், 105வது வார்டு துப்புரவு ஆய்வாளர் சந்தியா புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அரும்பாக்கத்தில் அதிகளவு குப்பை கொட்டப்படும் பகுதிகளை தேர்வு செய்து, அந்த பகுதியில் ‘‘குப்பையை சாலையில் வீசாதே’’ என அரிசி மாவில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும், குப்பையை உரிய இடத்தில் கொட்ட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, அரும்பாக்கத்தில் அதிகளவு குப்பைகள் கொட்டும் பகுதிகளை தேர்வு செய்து அந்த பகுதியில் வீடுகளின் முன்பு, கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கோலம் போடும் பெண்களால் நாங்கள் கோலமிடும் இடத்தில் குப்பை கொட்ட மனம் வராது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும். இது அவசரயுகம் இருசக்கர வாகனம் மற்றும் காரில் செல்பவர்கள் குப்பையை பிளாஸ்டிக் பைகளில் கட்டி சாலையோரம் வீசி செல்கின்றனர். ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து, தொட்டியில் குப்பையை போட்டு செல்ல வேண்டும். நம்மைப்போல் துப்புரவு தொழிலாளர்களும் மனிதர்கள் தான் என்பதை மனதில் நினைத்து மக்கள் செயல்பட வேண்டும்,’’ என்றார்.

Related Stories: