‘நான் ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்...’ வாட்ஸ் அப், பேஸ்புக் பிரசாரத்தில் கலக்கும் ஊராட்சி வேட்பாளர்கள்

மதுரை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் மூலமாக பாடல்களுடன் ஊராட்சி வேட்பாளர்கள் செய்து வரும் பிரசாரம் வாக்காளர்களை கவர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீடுகள்தோறும் சென்று வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஊருக்கு அறிமுகமான வேட்பாளர்களே களமிறங்குவதால், வெகு இயல்பாக, ‘‘பங்காளி, கட்டாயம் நமக்குத்தான் ஓட்டு போடணும். ஏத்தா... ஓட்டு போட வந்திருவியா..’’ என யதார்த்தமான பிரசாரத்தை கிராமங்களில் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர், சமூக வலைத்தளங்களின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை பயன்படுத்தி, தொழில்நுட்பரீதியில் பிரசார உத்தியில் கலக்குகின்றனர்.

உதாரணத்திற்கு, ஆட்டோ சின்னத்தில் நிற்கும் ஒருவர், ‘‘நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்’’ பாடலை பின்னணியில் ஓட விட்டு, தனது படம், சின்னம் படத்தை போட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அது மட்டுமல்ல... ‘‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்...’’, ‘‘வெற்றிக்கொடி கட்டு...’’, ‘‘உங்களைத்தான் நம்புது இந்த பூமி, இனி எங்களுக்கு நல்ல வழி காமி’’ போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு, தங்களது படத்தை போட்டு பட்டைய கிளப்புகின்றனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், பெரிய ஆவாரங்காடு ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் பாண்டியிடம் கேட்டபோது, ‘‘கிராம ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூ.34 ஆயிரம் மட்டுமே செலவிட முடியும்.

தற்போது பிளக்ஸ், பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவேதான், இந்த முறையில் பிரசாரம் செய்கிறோம். தற்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் வாட்ஸ்அப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால்தான் இந்த முறையில் பிரசாரம் செய்து வருகிறோம். இந்த பிரசாரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது’’ என்றார்.

Related Stories: