நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் 377 உள்கட்டமைப்பு திட்டம் தாமதம்: 3.94 லட்சம் கோடி கூடுதல் செலவு: மத்திய அரசு புள்ளி விவரத்தால் அதிர்ச்சி

புதுடெல்லி: உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் ஆனதால், 3.94 லட்சம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு புள்ளி விவரத்தால் தெரிய வந்துள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் பல உரிய நிதி இல்லாதது, துறை அனுமதி கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் தாமதம் ஆகிறது. நாளுக்கு நாள் மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், திட்டங்கள் தாமதம் ஆனால் செலவு அதிகமாகி விடுகிறது. 150 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இந்த அமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதன்படி, மொத்தம் 1,635 உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டம் துவக்கப்பட்டபோது இவற்றுக்கான செலவு மதிப்பீடு 19,47,462.67 கோடியாக இருந்தது. இவற்றில் 565 திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்க முடியாமல் தாமதம் ஆகியுள்ளன.

இவற்றில் 377 திட்டங்களுக்கான செலவு, தாமதம் காரணமாக கிடுகிடுவென அதிகரித்து விட்டது. இதனால், மேற்கண்ட மொத்த திட்ட செலவு 23,41,784.84 கோடியாக உயர்ந்து விட்டது. அதாவது, முதலில் மதிப்பீடு செய்யப்பட்ட திட்ட செலவை விட 20.25 சதவீதம் அதிகரித்து விட்டது.  மேற்கண்ட திட்டங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை 9,96,613.94 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது, திட்ட மதிப்பீட்டில் 42.55 சதவீதம் செலவழிக்கப்பட்டு விட்டது. தாமதம் ஆகும் 565 திட்டங்களில், 182 திட்டங்கள் ஒரு மாதம் முதல் 12 மாதங்கள் வரை தாமதம் ஆகின்றன. 129 திட்டங்கள் 13 முதல் 24 மாதங்கள், 140 திட்டங்கள் 25 முதல் 60 மாதங்கள், 114 திட்டங்கள் 61 மாதங்களுக்கு மேல் தாமதம் ஆகிறது என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய கெடு தேதியின்படி கணக்கிட்டால் தாமதம் ஆகும் திட்டங்கள் எண்ணிக்கை 495 ஆக குறையலாம். ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மேற்கண்ட திட்டங்கள் தாமதம் ஆவதற்கு நிதி பற்றாக்குறை, தாமதமான பணி, மாவோயிஸ்ட் பிரச்னை, தொழிலாளர் பற்றாக்குறை, நீதிமன்ற வழக்குகள், கட்டுமான பிரச்னைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவை காரணம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories: