உடல் உறுப்பு தானம், ஹெல்மெட் அவசியம் வலியுறுத்தி மாற்றுத்திறனாளி வாலிபர் சைக்கிள் பயணம்

*கோவை வந்தவருக்கு வரவேற்பு

கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(36). இவர் விபத்தில் ஒரு காலை இழந்தவர். நதிநீர் இணைப்பு, உடல் உறுப்பு தானம், தலைக்கவசம் அணிவதன் அவசியம், மரம் நடுதல், இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 13ம் தேதி கன்னியாகுமரியில் சைக்கிளில் பிரசார பயணத்தை துவக்கினார். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், வழியாக வந்த இவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், ‘‘15 வயதில் விளையாடியபோது விபத்து ஏற்பட்டு எனது வலது காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் பலர் ஏளனமாக பேசியதால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 2008ம் ஆண்டு சிவகங்கையில் இருந்து சென்னை வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், 2013ம் ஆண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையும் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டேன். ஈரோடு, சேலம் வழியாக வரும் ஜனவரி 1ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் எனது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்,’’ என்றார்.

Related Stories: