ஜவ்வாதுமலையில் ரூ.20 லட்சம் பணிகள் 10 ஆண்டுகளாக முடக்கம்: பாழாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்...கண்டுகொள்ளாத சுற்றுலாத்துறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களெல்லாம் பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நிலையில், ஜவ்வாதுமலையில் தொடங்கப்பட்ட சுற்றுலா வளர்ச்சிப் பணிகளும் முழுமையாக  நிறைவேறவில்லை என்று மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், எண்ணற்ற வரலாற்று சிறப்பையும், ஆன்மிக பெருமையும் கொண்ட சிறப்புக்குரியது.  இந்த மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று சிறப்புகளை, நினைவு சின்னங்களை, பெருமைகளை போற்றிப் பாதுகாக்க  தவறியதால், பெரும்பாலான வரலாற்று நினைவிடங்கள் அழிந்து வருகின்றன. அடுத்த தலைமுறை இவற்றை நினைவுகூற முடியுமா?, நேரில் காண இயலுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு துறைகளின் அக்கறையற்ற அணுகுமுறையால், அலட்சியத்தால், எண்ணற்ற வரலாற்று சின்னங்கள் முறையான பராமரிப்பின்றி அழிந்திருக்கிறது.  கலை, கலாச்சாரம், வீரம், கொடை, ஆட்சி, அதிகாரம், ஆன்மீகம், நாகரீகம் ஆகியவற்றின் பெருமைகளை அறிந்துகொள்ள, திருவண்ணாமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சான்றுகளும், ஆவணங்களும், கட்டுமானங்களும் இருக்கிறது.  ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், 13ம் நூற்றாண்டின் அடையாளமாக திகழும் படவேடு வேணுகோபால சுவாமி கோயில், 14ம் நூற்றாண்டின் கட்டுமான கலைக்கு சான்றாக  விளங்கும் பிரம்மதேசம் சந்திரமவுலீஸ்வரர் கோயில்,

 12ம் நூற்றாண்டின் வரலாற்று ஆன்மீக பெட்டகம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில், தசரதர் யாகம் செய்ததாக கூறப்படும் ஆரணி புதுகாமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில்,  பனையால் புகழ்பெற்ற திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயில், சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பருவதமலைக்கோயில் என இம்மாவட்டத்தின் ஆன்மிக வரலாற்று சிறப்புகள் ஏராளம். அதேபோல், மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும், இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ள ஜவ்வாதுமலையில், சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படாமல் முடங்கியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ₹20 லட்சம் மதிப்பில்  தொடங்கப்பட்ட ‘எக்கோ பார்க்’ அமைக்கும் பணிகள் முழுமையாக முடியவில்லை. அதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், ஜவ்வாதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் ஏற்படுத்தவில்லை. கோடை விழா நடைபெறும் நாட்கள் தவிர, ஆண்டின் மற்ற நாட்களில் ஜவ்வாதுமலை மீது அதிகாரிகள்  கவனம் திரும்புவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஜவ்வாதுமலையில் முடங்கியிருக்கும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் வரலாற்று நினைவிடங்களை, சின்னங்களை பராமரித்து, முறையாக  சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அலுவலர் பணியிடம் நிரப்புவது எப்போது?

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா அலுவலர் பணியிடம், கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. அதனால், வெளி மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், இந்த மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். திருவண்ணாமலை  அண்ணா நுழைவு வாயில் அருகே, சுற்றுலாத்துறை அலுவலகம் அமைந்திருக்கிறதுஎனவே, இந்த மாவட்டத்தில், சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பணிகளை நிறைவேற்ற முடியாமல், முடங்கியிருக்கிறது.

Related Stories: