குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் உள்ளதா?: மத்திய அரசுக்கு மம்தா பேனர்ஜி சவால்

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் இருக்கிறதா என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சவால்விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அதன் ஒருபகுதியாக கொல்கத்தாவில் பொது கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி 1970ம் ஆண்டின் குறியுரிமை ஆதாரங்களை கேட்பதாக கிண்டலாக கூறினார். இதனை தொடர்ந்து, குடியுரிமை சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா கட்சிக்கு துணிச்சல் இருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தட்டும். இந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் மோடி அரசு பதவி விலக வேண்டும். அதற்கு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தயாரா? என கூறினார். தொடர்ந்து, தேர்தலில் வெற்றி கிடைத்துவிட்டால் பாரதிய ஜனதா விரும்பியது எல்லாம் செய்யலாம் என்பது அர்த்தமல்ல என்று அவர் சாடினார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

Related Stories: