மேற்கூரை, விளக்குகளை காணோம்...கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரிதவிக்கும் மக்கள்; அதிகாரிகள் செவி சாய்ப்பார்களா?

அம்பத்தூர்: சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளது.இதன் வழியாக தினமும் 160க்கு மேற்பட்ட மின்சார ரயில் சேவைகளும், 50க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் நடைபெறுகிறது. கொரட்டூர் மற்றும் 20க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.கொரட்டூர் பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் ரயில் மூலமாக தான் வேலைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கொரட்டூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லைஇதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;கொரட்டூர் ரயில் நிலையம் 70 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தினமும் 25ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். பிளாட்பாரங்களில் உள்ள மின் விளக்குகள் இரவு எரிவதில்லை.  இதனால் இருளை பயன்படுத்தி  சமூக விரோதிகள் சில்மிஷம், பாலியல் தொல்லை, வழிப்பறி செய்கின்றனர். கடந்த வாரம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திருப்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில் மோதி பலியானார். கூரை இல்லாததால் மழை காலங்களில் அவதிப்படுகிறோம். கழிப்பறை பயன்பாடு இல்லாமல் மூடியே கிடக்கிறது. ரயில் நிலையம் தொடங்கும் போது கட்டப்பட்ட நடைமேம்பாலம் சேதம் அடைந்துள்ளது.

ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபடாததால்  திருட்டு, செயின் பறிப்பு நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பவில்லை. ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வந்து செல்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கப்பாதை பணிகளால், பயணிகள் ரயில் நிலையத்துக்கு சுற்றி வர வேண்டிய அவல நிலை உள்ளது. இவ்வாறு கூறினர்.எனவே, கொரட்டூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: