பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் மதில்சுவர்: பயணிகள் அச்சம்

பெரம்பூர்: பெரம்பூர் நெடுஞ்சாலையில் பெரம்பூர் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பெசன்ட்நகர், பாரிமுனை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வடசென்னை பகுதியில் பெரும்பாலான மக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரம்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களில் பயணித்து வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மதில்சுவர் பல ஆண்டு காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது பெய்த மழையில் சிறிது சிறிதாக சாய்ந்து தற்போது விழும் நிலையில் உள்ளது. மேலும், இந்த சுவரின் பல்வேறு இடங்களிலும் மரங்கள் முளைத்து சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதனால் எந்த நேரத்திலும் சுவர் கீழே விழும் அபாயம் உள்ளது.

அவ்வாறு சுவர் பேருந்து நிலையத்தில் உள்பக்கமாக விழுந்தால் எந்த அளவுக்கு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேபோல எதிர்திசையில் விழுந்தால் அந்த பகுதியில் டியூசன் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

எனவே தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் செல்லும் இடத்தில் மிகவும் ஆபத்தான உள்ள இந்த சுவரை உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போதுதான் கோவை மேட்டுப்பாளையம் நடுர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். மீண்டும் ஒரு சம்பவம் அதுபோன்று நடந்து விடக்கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை 6வது மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கும் போட்டிபோட்டு தாமதப்படுத்தாமல் உடனடியாக அந்த சுவரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: