வன்முறை, பிளவை உருவாக்கி சொந்த மக்கள் மீது பாஜ அரசு போர் தொடுத்துள்ளது: காங். தலைவர் சோனியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: வன்முறை, பிளவை உருவாக்கி சொந்த மக்கள் மீது பாஜ அரசு போர் தொடுத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் அரசியலமைப்பை பாதுகாத்து, சிறந்த நிர்வாகத்தை அளித்து அமைதி, நல்லிணக்கத்தை பராமரிப்பது அரசின் கடமையாகும். ஆனால் பாஜ அரசு சொந்த மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. அது வன்முறையையும் பிளவையும் உருவாக்கி உள்ளது. நாட்டை வெறுப்பின் படுகுழிக்குள் தள்ளியும் இளைஞர்களின் எதிர்காலத்தை இருட்டடித்தும் வருகிறது.

தனது அரசியல் லாபத்துக்காக நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, இளைஞர்களின் உரிமைகளை பறித்து, மத வெறுப்பிலான பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே இந்த அரசியல் நாடகத்தின் கதாசிரியர்கள் ஆவர். மோடி தலைமையிலான அரசு சிறந்த ஆட்சி வழங்க தவறிவிட்டதே இதற்கு காரணமாகும். நாட்டில் வேலையின்மை, கல்வி நிறுவனங்களில் குழப்பம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவை முன் எப்போதும் இல்லாத அளவு நீடிக்கும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வன்முறை, கலவரத்தின் மூலம் மத கலவரத்தை பாஜ தூண்டி வருகிறது. ஆனால் மோடி அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தால், புதிய மாற்றம் ஏற்படும். இளைஞர்கள், மாணவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை மோடியின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான தொடக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: