மெட்ரோ ரயில் வாகன இணைப்பு சேவைக்கு தனிக்கவனம் வேண்டும்: அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: மெட்ரோ ரயில் வாகன இணைப்பு சேவையை பயணிகளிடம் கொண்டுபோய் சேர்க்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நிர்வாகம் பல்வேறு வாகன சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 7 நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நந்தனம், ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி, விமான நிலையம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. ரூ.10 கட்டணத்துடன் குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ தூரம் வரை இச்சேவை செயல்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சில நிலையங்களை தவிர சென்ட்ரல், அண்ணாநகர் டவர், கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், சைதப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இச்சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதேபோல், சென்ட்ரல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 1 முதல் 10 பேர் வரையில் மட்டுமே சேவையை பயன்படுத்தியதால், அந்த நிலையத்தில் மட்டும் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வாகன இணைப்பு சேவைக்கு தனிக்கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமான நிலையம், அரசினர் தோட்டம், வண்ணாரப்பேட்டை, டி.எம்.எஸ் ஆகிய நிலையங்களில் வாகன இணைப்பு சேவைக்கு வரவேற்பு உள்ளது. ஆனால், மற்ற நிலையங்களில் இச்சேவைக்கு வரவேற்பு குறைவாக உள்ளது. எனவே, இந்த நிலையங்களில் சேவையை மேம்படுத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.

ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கும் நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் வாகன இணைப்பு சேவைக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் சீருந்து இணைப்பு சேவை குறித்து எடுத்துரைக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் மாதம் வரை எவ்வளவு பேர் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்பதன் விவரத்தை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் இப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: