டோல்கேட் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு: ஜனவரி 15ம் தேதி வரை அவகாசம்

சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக மத்திய அரசு இந்த கால நீட்டிப்பை அளித்துள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாடு முழுவதும் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் நேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும்.இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் கார்டு அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, வாகன உரிமையாளர்கள் லைசென்ஸ் நகல், ஆர்சி புக், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும்.

இந்த பாஸ்டேக் கார்டை பெறும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சராசரியாக ரூ.400 வரை கார்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரூ.200க்கு கீழ் சென்றால் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். தற்போது இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கடக்கும் போது தானாக கட்டணத்தை வசூலித்து கொள்கிறது. இந்த நடைமுறை மிகவும் எளிதானது என்றாலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் பெரும்பாலான வாகன ஓட்டிகளால் பெற முடியவில்லை. இதனால், கடந்த டிசம்பர் 1ம் தேதி பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 60 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை பெற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முதல் பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறை கட்டாயமாக்கப்பட இருந்தது. ஆனால், பலரும் ஸ்டிக்கர் வாங்காத நிலையில், அவர்கள் சுங்கச்சாவடிகளில் இருமடங்கு அபராதம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் 25 சதவீதம் சுங்கச்சாவடிகளின் வழிப்பாதைகளில் பாஸ்டேக் முறையை மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அந்த பணிகளும் இன்னும் முடிவடையவில்லை.

பாஸ்டேக் முறை அமல்படுத்தும் பட்சத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நேற்று காலை 8 மணிமுதல் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 30 நாட்கள் கால அவகாசம் நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் ஜனவரி 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, ‘வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா கட்டண முறையை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. தற்போது வரை சுங்கவழிப்பாதைகளில் சிப் பொருத்தும் பணி நடக்கிறது. மேலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் பலர் வாங்க வேண்டியுள்ளது. எனவேதான், இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒருபாதை மட்டும், ஹைபிரிட் பாதையாக வைக்கப்படும். அதாவது, பாஸ்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும்’ என்றார்.

Related Stories: