3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 3.1 டிஎம்சி தந்தது ஆந்திர அரசு : பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: ஆந்திர அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு அதிகபட்சமாக 3.1 டிஎம்சி நீர் தந்து இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். இதில், முதல் தவணைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணைக்காலம் தொடங்கிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்ைக வைத்தனர். இதையேற்று, கடந்த செப்டம்பர் 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.

இந்த தவணை காலத்தில் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறப்பு குறைத்தது. இதனால், 3 டிஎம்சியாவது கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதை தொடர்ந்து சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில் டிசம்பர் முதல் வாரம் முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், மேலும், 3 டிஎம்சி தமிழகத்துக்கு கூடுதலாக தரப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்பேரில் தமிழகத்துக்கு கடந்த டிசம்பர் 1ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ேநற்று காலை 6 மணி நிலவரப்படி 505 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது வரை 3.1 டிஎம்சி (3131 மில்லியன் கன அடி) ஆந்திரா தந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர அரசு 2.50 டிஎம்சிக்கு மேல் தந்ததில்லை. ஆனால், தற்போது அதிகப்பட்சமாக 3.1 டிஎம்சி வரை தமிழகத்துக்கு ஆந்திரா தந்துள்ளது. 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 44 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, இம்மாதம் இறுதி வரை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 5 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதை வைத்து 5 மாதங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்நிலையில் தற்போது, பருவமழை தொடர்ந்து பெய்ய வேண்டும். இல்லையெனில், ஆந்திரா 3 டிஎம்சி கூடுதலாக தந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு அக்டோபர் வரை நிலைமை சமாளிக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: