நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடாதவர்கள் வரலாற்றால் கோழைகளாக தீர்மானிக்கப்படுவார்கள்: பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு

புதுடெல்லி: நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடாதவர்கள் வரலாற்றால் கோழைகளாக தீர்மானிக்கப்படுவார்கள் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 370வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து இந்தியாவை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் டெல்லியில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. டெல்லி ராம்லீலா திடலில் இன்று பிற்பகல் இந்த பேரணி தொடங்கியது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த பேரணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் வருகை காரணமாக டெல்லி நகரம் குலுங்கியுள்ளது. இந்த பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, அநீதிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது. நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடாதவர்களை வரலாற்றால் கோழைகளாக தீர்மானிக்கபடுவார்கள். இப்போது போராடவில்லை என்றால் நமது அரசியல் சாசனம் அழிந்து போகும். நாடு பிளவுகளை சந்திக்கும். பாஜக ஆட்சியில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. வேலையின்மை அதிகரித்து வருகிறது. அரசியல்சாசனத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டார். பாஜகவின் தவறான நிர்வாகத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவது நமது கடமை ஆகிறது. வன்முறையில்லாத, சகோதரத்துவத்தை பேணும் நாடு இந்தியா. இந்த இந்தியாவை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது வேதனையளிககிறது, என்று கூறியுள்ளார்.

Related Stories: