சர்வதேச அளவில் நடைபெற்ற சோதனையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது

புதுடெல்லி: சர்வதேச அளவில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். சர்வதேச அளவிலான போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் இந்த அதிரடி சோதனையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், இந்தியாவில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கோகைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 55 கிலோ கோகைன் மற்றும் 200 கிலோ மெதாமெபிடமைன் ஆகிய போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி ஆகும். அதேபோல், இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.100 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் பலதரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் டெல்லி மற்றும் அண்டை பகுதிகளான பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பரவியுள்ளது என்று என்சிபி தெரிவித்துள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா மற்றும் நைஜீரியா நாடுகளில் உள்ள போதைப்பொருள் குழுக்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: