கடலூர் அருகே ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயித்து ஊர்க்கூட்டத்தில் தீர்மானம்!

கடலூர்: கடலூர் அருகே ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையே கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் ஏலத்தில் விடப்படுவதாகவும், கூடுதல் விலையை கொடுப்பவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பான தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி பதவிகளை ஏலத்தில் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை ஒருபுறம் இருக்க, கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மங்களூர் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டாக்குறிச்சி  கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியிட விரும்புவோர், ரூ.2 லட்சம் கட்டணம் செலத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊரின் முக்கியஸ்தரிடம் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படும் என மங்களூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி ஊர்க்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மற்ற கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்பத்தியுள்ளது.

Related Stories: