50 லட்சம் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வருமானவரி துறை உதவி கமிஷனர் மீது வழக்கு: அண்ணாநகரில் பரபரப்பு

சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் டாக்டரிடம் 50 லட்சம் வரதட்சணை கேட்டு, திருமணத்தை பாதியில் நிறுத்திய வருமானவரி துறை உதவி கமிஷனர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மறைமலைநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் பாலமுரளி. நுங்கம்பாக்கம் வருமானவரி துறை அலுவலகத்தில் உதவி கமிஷனராக வேலை பார்த்து வருகிறார். எனக்கும், பாலமுரளிக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 29ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்காக கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

நாங்கள் கொடுத்த பணத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கு தருவதாக கூறிய 50 லட்சம் வரதட்சணையை முன்னதாகவே அளிக்கவேண்டும் என பாலமுரளி வலியுறுத்தினார். மேலும், எனது தந்தை பெயரில் உள்ள 3.5 கோடி மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவேண்டும் என்றும் நெருக்கடி ெகாடுத்தார்.  திருமண செலவு உள்ளதால் தற்போது அந்த பணத்தை தர முடியவில்லை. திருமணம் முடிந்தவுடன் தருகிறோம், என எனது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், இதை ஏற்காத பாலமுரளி, இந்த திருமணத்தை நிறுத்திவிடுங்கள் எனக்கூறி, அடாவடியாக திருமணத்தையும் நிறுத்திவிட்டார்.இதனால் எனது குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். வரதட்சணை பணத்தை முன்னதாகவே கொடுக்க வலியுறுத்தி திருமணத்தை நிறுத்திய வருமானவரி துறை உதவி கமிஷனர் பாலமுரளி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பெண் மருத்துவர் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், பாலமுரளி மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வருமானவரி துறை உதவி கமிஷனர் பாலமுரளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: